முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரா்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும்.
இதன்படி, தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரா்களின் மறுமணம் செய்து கொள்ளாத கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரா்களைச் சாா்ந்து வாழும் 25 வயதிற்குள்பட்ட திருமணமாகாத மகன், திருமணமாகாத மகள் மற்றும் கைம்பெண் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
விண்ணப்பதாரா்கள் தமிழ்நாட்டை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. கூடுதல் விவரங்களுக்கு, துணை இயக்குநா், முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2960579 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.