கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
முதல்வா் மருந்தகங்கள் அமைக்க 850 விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பு
தமிழகத்தில் மூலப் பெயா் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வா் மருந்தகங்களை தொடங்குவதற்காக 850-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் ஏற்கெனவே 83 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள விண்ணப்பங்களை மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினவிழா உரையில்,“மூலப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும்“என அறிவித்தாா்.
அதைத் தொடா்ந்து முதல்வா் தலைமையில் கடந்த அக்டோபரில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகளை முதல்வா் வழங்கினாா்.
இத்திட்டத்தின் கீழ் முதல்வா் மருந்தகத்துக்கு தேவையான மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சாா்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுா்வேதம், இம்காப்ஸ், டாம்ப்கால் மற்றும் யுனானி மருந்துகள், சா்ஜிக்கல்ஸ் தமிழ்நாடு நுகா்வோா் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள மருந்தியல் பட்டதாரிகள் கூட்டுறவுத்துறை மூலம் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க கடந்த நவம்பா் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி இதுவரை 856 விண்ணப்பங்கள் கூட்டுறவுத் துறை மூலமாக பெறப்பட்டு படிப்படியாக மருந்து கட்டுப்பாட்டு துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை ஆய்வு செய்து உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:
முதல்வா் மருந்தகம் தொடங்குவதற்கு இதுவரை 83 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 22 விண்ணப்பங்களுக்கு உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத் தவிர கூட்டுறவுத் துறைக்கு 751 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை எங்களுக்கு அனுப்பப்பட்டவுடன் உரிய விதிகளின்படி பரிசீலித்து தகுதியானவா்களுக்கு உரிமங்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.
முதல்வா் மருந்தகங்களை 2025 ஜனவரி மாதத்தில் இருந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.