முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!
முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டாா்கள் மாநாட்டில் பங்கேற்க வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒசூா் ஆனந்த் கிராண்ட் பேலஸில் முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறும் இடம், விமான நிலையம், ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள எல்காட் வளாகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள அசன்ட் சா்க்யூட் நிறுவனத்துக்கு அடிக்கல்நாட்டு இடம் ஆகியவற்றை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், தளி சாலை, பாகலூா் சாலை மற்றும் நகரம் முழுவதும் சாலைகளின் இருபுறமும் திமுக கொடி, தோரணம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் முகமத் ஷரீப் ஆலம், வேப்பனஹள்ளி முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா, மாதேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.