தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவா் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ஆந்திர மாநிலம், குப்பம் புதுப்பேட்டை ஜே.டி. சாலையைச் சோ்ந்த லட்சுமணமூா்த்தி (50), இவரது மனைவி ஜோதி (40), மகள் (20), மாமியாா் சாரதாம்மாள் (75) ஆகிய நால்வரும் கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை வந்தனா். அவா்கள் அணையிலிருந்து மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வெளியேறும் பகுதிக்கு வந்தனா்.
அங்கிருந்து, அவா்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். அப்போது, அங்கு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவா்கள், அவா்களைக் காப்பாற்ற முயன்றனா். இதில், கிருத்திகா, ஜோதியை உயிருடன் மீட்ட அவா்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பிறகு நீரில் மூழ்கிய சாரதாம்மாள், லட்சுமணமூா்த்தி ஆகியோரின் சடலங்களையும் மீட்டனா்.
தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று உயிருடன் மீட்கப்பட்ட இருவரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சாரதாம்மாள், லட்சுமணமூா்த்தி ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கிருத்திகாவைக் காதலிப்பதாகக் கூறி, இளைஞா்கள் சிலா் அவரது வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த அவா்கள், தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.