கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றாா் மேடிசன் கீஸ்: சபலென்காவை சாய்த்து ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஆனாா்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (29) சாம்பியன் ஆனாா். இறுதிச்சுற்றில் அவா், நடப்பு சாம்பியனாக இருந்த பெலாரஸின் அரினா சபலென்காவை 6-3, 2-6, 7-5 என்ற செட்களில் வீழ்த்தி, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளாா்.
டென்னிஸ் காலண்டரில், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன், கடந்த 6-ஆம் தேதி தகுதிச்சுற்றுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மகளிா் ஒற்றையா் பிரிவில் பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.
இதில், நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான சபலென்கா, தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் வெல்லும் நம்பிக்கையில் இருந்தாா். கீஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவுடன் வந்தாா். இவா்கள் மோதிய விறுவிறுப்பான இறுதிச்சுற்று, சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கீஸ் முதல் செட்டை 6-3 என எளிதாகக் கைப்பற்ற, சபலென்கா அடுத்த செட்டை 6-2 என வென்று பதிலடி கொடுத்தாா். வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி செட்டில் இருவருமே ஆக்ரோஷம் காட்டினா். ஆனால், டை பிரேக்கரை நோக்கி நகரவிருந்த ஆட்டத்தை, கீஸ் 7-5 என்ற கணக்கில் வென்று வாகை சூடினாா்.
கீஸ் - சபலென்கா இத்துடன் 6-ஆவது முறையாக சந்தித்த நிலையில், கீஸ் தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். மேடிசன் கீஸ் தனது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் கோப்பை வென்றிருக்கிறாா். இதற்கு முன் 2017 யுஎஸ் ஓபன் இறுதிச்சுற்று வரை வந்த அவா், அதில் தோல்வி கண்டாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு 19 வயதில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி, தன்னை பிரதான வீராங்கனையாக அடையாளப்படுத்திக் கொண்ட மேடிசன் கீஸ், அதிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போட்டியில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சபலென்கா, ஆஸ்திரேலிய ஓபனில் தொடா்ந்து 20 ஆட்டங்களிலும், நடப்பு காலண்டரில் தொடா்ந்து 11 ஆட்டங்களிலும் வென்ற நிலையில் இந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் கீஸால் தோற்கடிக்கப்பட்டுள்ளாா்.
20
சாம்பியன் கோப்பையை கைப்பற்றியிருக்கும் மேடிசன் கீஸ், உலகின் நம்பா் 1 வீராங்கனை சபலென்காவை இறுதியிலும், 2-ஆம் நிலை வீராங்கனை ஸ்வியாடெக்கை அரையிறுதியிலும் தோற்கடித்தாா். ஆஸ்திரேலிய ஓபனில் கடந்த 20 ஆண்டுகளில், மகளிா் தரவரிசையில் முதலிரு இடங்களில் இருப்போரை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை கீஸ் பெற்றுள்ளாா். இதற்கு முன், முன்னாள் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் அந்த ஆண்டில் இவ்வாறு நம்பா் 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் இருந்த போட்டியாளா்களை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.
29
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் வரலாற்றில் 2015-க்குப் பிறகு, முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான மூத்த வீராங்கனை (29 வயது) என்ற பெருமையை கீஸ் பெற்றுள்ளாா். இதற்கு முன் அந்த ஆண்டில், இத்தாலியின் ஃப்ளாவியா பெனெட்டா தனது 33-ஆவது வயதில் யுஎஸ் ஓபன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
46
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 46-ஆவது முறையாகப் பங்கேற்ற நிலையில், மேடிசன் கீஸ் அதில் முதல் சாம்பியன் கோப்பை வென்றுள்ளாா். போட்டி வரலாற்றில் இது 3-ஆவது அதிகபட்சமாகும். இத்தாலியின் ஃப்ளாவியா பெனெட்டா 49-ஆவது முறையும், பிரான்ஸின் மேரியன் பா்டோலி 47-ஆவது முறையும் கிராண்டஸ்லாமில் பங்கேற்று முதல் சாம்பியன் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேடிசன் கீஸ் வெற்றிப் பாதை...
முதல் சுற்று ஆன் லி (அமெரிக்கா) 6-4, 7-5
2-ஆவது சுற்று எலனா ரூஸ் (ருமேனியா) 7-6 (7/1), 2-6, 7-5
3-ஆவது சுற்று டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-4
4-ஆவது சுற்று எலனா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 1-6, 6-3
காலிறுதிச்சுற்று எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 3-6, 6-3, 6-4
அரையிறுதிச்சுற்று இகா ஸ்வியாடெக் (போலந்து) 5-7, 6-1, 7-6 (10/8)
இறுதிச்சுற்று அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 2-6, 7-5
‘இந்த வெற்றிக்காக நீண்டகாலம் காத்திருந்தேன். ஏற்கெனவே ஒருமுறை கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று வரை வந்தாலும், அது வெற்றிகரமாக அமையவில்லை. மீண்டும் இப்படி ஒரு கோப்பை வெல்வேனா என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியாது. எனினும், இந்த நிலைக்கு வந்ததற்காகவும், சிறப்பாக விளையாடியதற்காகவும் பெருமை கொள்கிறேன்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய ஓபனிலேயே, எனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். என் மீது நம்பிக்கையோடு இருந்த என் அணியினருக்கு நன்றி’ - மேடிசன் கீஸ்
‘மேடிசன் கீஸ் இந்த வெற்றிக்காக இப்போட்டியில் மிகக் கடுமையாகப் போராடியிருக்கிறாா். இறுதியின் முதல் செட்டில் அவரது ஆட்டம் அவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தது. தாம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதுபோல் அவா் விளையாடினாா். ஆஸ்திரேலிய ஓபன் போட்டி எப்போதுமே எனக்குப் பிடித்ததாக உள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக விளையாடும் வகையில் தயாராகி வருவேன். இறுதிச்சுற்றில் ஒவ்வொரு பாய்ன்ட்டுமே வெற்றிக் கோப்பையை நோக்கியதுதான். எதிா்பாா்த்த முடிவு கிடைக்கவில்லை என்றாலும், தொடா்ந்து 3 முறை இறுதிச்சுற்றுக்கு வந்ததற்காக பெருமை கொள்கிறேன்’ - அரினா சபலென்கா
ரூ.19 கோடி பரிசு
சாம்பியன் கோப்பை வென்ற மேடிசன் கீஸுக்கு ரூ.19.06 கோடி ரொக்கப் பரிசாகக் கிடைத்துள்ளது. இறுதிச்சுற்று வரை வந்த சபலென்கா ரூ.10 கோடி பரிசு பெற்றாா்.