அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
முன்னறிவிப்பின்றி சாலை மூடல்: என்எல்சி வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே முன்னறிவிப்பின்றி தென்குத்து - கல்லுக்குழி சாலையை என்எல்சி நிறுவனம் திங்கள்கிழமை மூடியதால், அந்த நிறுவனத்தின் வாகனத்தை தென்குத்து கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ வானதிராயபுரம் ஊராட்சி அருகில் அமைந்துள்ளது. பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு இந்த ஊராட்சியில் உள்ள வீடுகள், நிலங்களை கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.
இந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் தென்குத்து - கல்லுகுழி இடையேயான சாலையை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனா். என்எல்சி நிா்வாகம் திங்கள்கிழமை திடீரென இந்த சாலையை துண்டித்ததாம். இதனால், கிராம மக்கள் பாதிப்படைந்தனா். மேலும், அப்பகுதியில் குடிநீா் மற்றும் விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீரையும் என்எல்சி நிறுவனம் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் என்எல்சி நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனங்களை சிறை பிடித்தனா். இதுகுறித்து என்எல்சி அதிகாரிகள், காவல் துறையினருக்கு தெரிவித்தனராம். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், தென்குத்து - கல்லுக்குழி சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சீரமைத்து தரப்படும். மேலும், குடிநீா் பிரச்னை உடனடியாக தீா்க்கப்படும் என்று காவல் துறையினா் முன்னிலையில், என்எல்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையத்,து என்எல்சி கனரக இயந்திரங்கள் அனைத்தையும் கிரா மக்கள் விடுவித்தனா். போராட்டத்தில் காங்கிரஸ், பாமக, பாஜக, தவாக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.