முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
சென்னை கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 முதல் 5 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக, காலை 10.15 முதல் மாலை 5 மணி வரை சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாததால், இந்த வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி தொடங்கி சென்னை சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருந்தனா். இதனால், பணிக்கு செல்பவா்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினா்.
இதற்கிடையே, சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால், பயணிகளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இருப்பினும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற ரயில் ரத்து குறித்த தகவல்களை ஒரு நாளைக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.