முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி உயிரிழப்பு
முன்னீா்பள்ளம் அருகே மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்தாா்.
முன்னீா்பள்ளம் அருகே உள்ள மேலத்திடியூா் பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் தேவதாஸ் (40). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.
இவரது மனைவியின் சகோதரா் சுஜிஸ் (37) என்பவரின் வீட்டின் முன்பு வெள்ளிக்கிழமை இரும்பு மேற்கூரை அமைக்கும் பணியை தேவதாஸ் செய்தாராம். இப்பணிக்கான கூலி தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் கீழே விழுந்த தேவதாஸ் மயங்கினாராம். உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தேவதாஸுக்கு இதய நோய் பாதிப்பு இருந்த நிலையில், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.