Driver Amma: துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்தும் 72 வயது கேரளப் பெண்மணி; ...
மும்பை: 'தந்தையின் பாதை எனக்கு வேண்டாம்' - தாதா வரதராஜன் மகன் மோகன் மறைவு; தமிழ் அமைப்புகள் இரங்கல்
மும்பையில் வரதராஜன் முதலியார் இறந்த பிறகு அவரது மகன்கள் யாரும் அவரது வழியைப் பின்பற்றாமல் தங்களுக்குத் தனித்தனி வழியை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் மோகன் மட்டும் தொடர்ந்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.
மும்பையில் வரதராஜன் நடத்தி வந்த கணபதி விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வந்தார். மாட்டுங்கா ரயில் நிலையத்திற்கு எதிரில் கணபதி விழா ஒவ்வொரு ஆண்டும் மோகன் தலைமையில் கொண்டாடப்படுவது வழக்கம். தந்தை நடத்தி வந்த கணபதி விழாவை மட்டும் நடத்தி வந்த மோகன் தனது தந்தையின் வழியில் செல்லாமல் தனிப்பாதையில் பயணிக்கத் தொடங்கினார்.

ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்தினார். அவர் மீது குஜராத்தில் கள்ளநோட்டு கடத்தல் வழக்கு மட்டும் பதிவானது. வேறு எந்த வழக்கும் அவர் மீது கிடையாது. சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மோகன், விநாயகர் சதுர்த்தியான நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
அவரது இறுதிச்சடங்கு இன்று மாட்டுங்காவில் நடைபெறுகிறது. மிகவும் மென்மையான குணம் கொண்ட மோகனை அனைவரும் மோகன்பாய் என்று அழைப்பது வழக்கம். வரதராஜன் இறந்த பிறகு மோகனிடம் வரதராஜனின் ஆட்கள் அனைவரும் கூட்டத்தை வழிநடத்தும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களின் பேச்சைக் கேட்க மறுத்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மோகனின் மறைவுக்கு மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.