கரியக்கோயில் ஆற்றங்கரை தும்பலில் சிதைந்து வரும் கல்வட்டங்கள்!: கிடப்பில் போடப்பட...
மும்பை நடிகையை சட்டவிரோதமாக 40 நாள்கள் சிறையில் அடைத்த IPS அதிகாரி கைது
மும்பையைச் சேர்ந்த நடிகை காதம்பரி என்பவர் இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிப்படங்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை காதம்பரி கடந்த 2023-ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறி மும்பை போலீஸில் புகார் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயவாடாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் விஜய்சாகர் என்பவர் கொடுத்த நில மோசடி புகாரைத் தொடர்ந்து நடிகை காதம்பரியை ஆந்திரா போலீஸார் மும்பை வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.
காதம்பரியிடம் எந்த வித விளக்கமும் கொடுக்காமல் அவரையும், அவரது பெற்றோரையும் கைது செய்து விஜயவாடாவிற்கு அழைத்துச்சென்று 42 நாள்கள் காவலில் வைத்திருந்தனர். அந்நேரம் ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சி இருந்தது.

இதனால் காதம்பரியால் எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு காதம்பரி இது தொடர்பாக மீண்டும் ஆந்திரா போலீஸில் புகார் செய்தார்.
தன்னை சட்டவிரோதமாக கைது செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். கைது செய்யப்பட்ட பிறகு மும்பை தொழிலதிபர் மீது கொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி நிர்ப்பந்தம் செய்ததாகவும், வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும் நடிகை குற்றம் சாட்டி இருந்தார்.
அதன் அடிப்படையில் ஆந்திராவில் புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஆஞ்சநேயலு, விஜயவாடா போலீஸ் கமிஷனர் கிராந்தி ரானா, துணை கமிஷனர் விஷால் என மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தற்போது ஆஞ்சநேயலு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஐதராபாத்தில் கைது செய்து விஜயவாடாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆஞ்சநேயலு வாய்மொழியாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் கிராந்தி ரானாவிற்கு நடிகை காதம்பரியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை சரியாக விசாரிக்காமல் கிராந்தி ரானா துணை போலீஸ் கமிஷனர் விஷாலிடம் மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக நடிகை மீது நிலமோசடி பதிவு செய்யப்படும் முன்பு நடிகையை கைது செய்ய மும்பைக்கு போலீஸ் அதிகாரிகள் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாவும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
