மாற்றுத்திறனாளிகள் தோ்வெழுத உதவியாளா்கள்: டிஎன்பிஎஸ்சி தோ்வாணையா் பதிலளிக்க உத...
`பாலியல் வன்கொடுமை முயற்சி' - ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளம் பெண்! - என்ன நடந்தது?
ஹைதராபாத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் 23 வயதுப் பெண் ஒருவர் தன்னுடைய பழுதான போனை சரிசெய்வதற்காக மேட்சலிலிருந்து செகந்திராபாத்துக்கு சென்றிருக்கிறார். வந்த வேலை முடிந்ததும் மதியம் 1 மணியளவில், உள்ளூர் ரயிலில் மீண்டும் மேட்சலுக்கு செல்வதற்காக பெண்கள் பெட்டியில் ஏறியிருக்கிறார். அப்போது அந்தப் பெட்டியில் சில பெண்கள் இருந்திருக்கின்றனர்.

இரவு 8.15 மணியளவில், அல்வால் நிறுத்தத்தில் பெட்டியில் இருந்த பெண் பயணிகள் இறங்கிவிட்டனர். அதைத் தொடர்ந்து பெட்டி காலியாகிவிட்டது. அப்போது, ஒரு மெலிந்த, கருமை நிறம்கொண்ட ஆண், பெட்டிக்குள் நுழைந்து, அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அந்தப் பெண், அவனை தள்ளிவிட்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
அதனால், அந்தப் பெண்ணின் தலை, முகம், கழுத்து, வலது கை மற்றும் இடுப்பில் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த வழியாக வந்த ஒருவர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அவருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையிடம், 'தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரை அடையாளம் காண முடியும்" எனக் கூறியுள்ளார்.

பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவு 131 (தாக்குதல் அல்லது குற்றவியல் பலவந்தத்திற்கான தண்டனை) மற்றும் 71 (மீண்டும் மீண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைக் கவனத்தில் கொண்ட, தெலுங்கானா எதிர்க்கட்சித் தலைவர் கே.டி.ராமராவ், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.