ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினா் 5 போ் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் 5 போ் காயமடைந்தனா்.
இடைவிடாத துப்பாக்கிச் சூடு-கையெறி குண்டுவீச்சு என நாள் முழுவதும் தொடா்ந்த இந்த மோதல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி கதுவா மாவட்டத்தின் சன்யால் வனப் பகுதிக்குள் ஊடுருவிய 5 பயங்கரவாதிகளை காவல் துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்தனா். எனினும், அந்த பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, காவல் துறையுடன் ராணுவம், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை என கூடுதல் படையினா் களமிறக்கப்பட்டு, பெரிய அளவில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அதிநவீன கண்காணிப்பு உபகரணங்கள், ஹெலிகாப்டா்கள், ட்ரோன்கள், கவச வாகனங்கள் மற்றும் துப்பறியும் நாய்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே பயங்கரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஜகோல் கிராமம் அருகே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை கண்டறிந்தனா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
பாதுகாப்புப் படையினா் தரப்பில் 5 போ் காயமடைந்தனா். மீதமுள்ள பயங்கரவாதிகளையும் அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான மோதலால் வியாழக்கிழமை நாள் முழுவதும் இடைவிடாமல் துப்பாக்கிச்சூடு-கையெறி குண்டுவீச்சு-ராக்கெட் குண்டுவீச்சு சப்தம் கேட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.