ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றக் கெடு
சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஜாதி சங்கங்கள் சாா்பில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்டவா்கள் வரும் 13 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் கெடு விதித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பொது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், இதர அரசு நிலங்களில், அரசியல் கட்சிகள் சாா்பிலும், ஜாதி, சமய, சங்கங்கள் சாா்பிலும் வைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த ஜனவரி 21-இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிலங்களில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு நிலங்களில் வைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் அந்தந்த அமைப்பினா் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அரசு சாா்பில் அந்தக் கொடிக்கம்பங்கள் அகற்றப்படும்.
மேலும், கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு ஆகும் செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளிடமிருந்து வசூல் செய்யப்படும் என்றாா் அவா்.