`மாப்ளா ரெபெல்ஸ்': குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறும் ஊட்டியின் முதல் காவல் நில...
மும்பை - புனே : காஸ்ட்லியான விரைவுச் சாலை... ஒரு மணிநேர பயணத்துக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
நாட்டில் முதல் 6 வழி நெடுஞ்சாலை மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டது. மும்பையில் இருந்து புனே வரை அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை சஹாத்ரி மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்வது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். சாலையின் இருபக்கமும் பசுமை, மலைகள், சுரங்கங்கள், பல அடி ஆழமான பள்ளத்தாக்குகள் என்று இருக்கும்.24 மணி நேரமும் இந்த சாலை பரபரப்பாக காணப்படும். சாலையில் எந்நேரமும் போலீஸ் வாகனமும், ஆம்புலன்ஸும் சுற்றிக்கொண்டே இருக்கும்.1998ம் ஆண்டு இந்த சாலை கட்டுமானப்பணி சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்டது.
இச்சாலை 2002-ம் ஆண்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டாலும், அது முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. ஆங்காங்கே பணிகள் முழுமையடையாமல் இருந்தது. மகாராஷ்டிரா சாலை மேம்பாட்டுக்கழகம் அந்த பணிகளை படிப்படியாக முடித்து 22 ஆண்டுகளுக்கு பிறகு பணிகளை முழுமை செய்துள்ளது. இருபுறமும் தலா 3 வழித்தடங்களை கொண்ட காங்கிரீட் சாலையாக இது அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வழித்தடங்களுக்கு நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
நவிமும்பை கலம்பொலி என்ற இடத்தில் தொடங்கும் இந்த சாலை புனேயில் உள்ள கிவாலே என்ற இடத்தில் முடிகிறது. மொத்தம் 94.5 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த சாலையில் பயணம் செய்தால் மும்பையில் இருந்து புனேவிற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும். வழக்கமான மும்பையில் இருந்து ரயில் மூலம் புனே செல்ல 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால் இந்த சாலையில் ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும். ஆனால் அதற்கு வாகன ஓட்டிகள் அதிக அளவு செலவு செய்யவேண்டியிருக்கிறது.
இந்த நெடுஞ்சாலையில் ஒரு முறை கார் செல்லவேண்டுமானால் அதற்கு ரூ.336 டோல் கட்டணமாக செலுத்தவேண்டியிருக்கிறது. அதாவது ஒரு கிலோமீட்டருக்கு 3.40 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால் நாட்டில் உள்ள மற்ற நெடுஞ்சாலைகளில் சராசரியாக டோல் கட்டணம் ரூ.2.40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் மும்பை - புனே நெடுஞ்சாலைதான் நாட்டிலேயே மிகவும் அதிக கட்டணம் வசூலிக்கும் நெடுஞ்சாலையாகவும், அதேசமயம் மிகவும் பிஸியான நெடுஞ்சாலையாக கருதப்படுகிறது. மும்பை மற்றும் புனே மகாராஷ்டிராவின் இரண்டு முக்கிய நகரங்கள் ஆகும். மும்பைக்கு நிகராக புனேயும் வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் இரு நகரங்களிடையே வாகனங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த சாலையை கட்டி முடிக்க ரூ.16,300 கோடி செலவிடப்பட்டுள்ளது. இச்சாலையில் தற்போது சராசரியாக தினமும் 85 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 லட்சம் வாகனங்கள் வரை இந்த சாலையில் பயணம் செய்கின்றன.இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சாலையின் இருபுறமும் மேலும் ஒரு வழித்தடத்தை கட்டும் வேலையில் மாநில சாலை மேம்பாட்டுக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக மலைகள் குடையப்பட இருக்கிறது. இதற்காக 100 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. புதிதாக 8 சுரங்க மலைப்பாதைகள் அமைக்கப்பட உருவாக்கப்பட இருக்கிறது. இச்சாலைக்கு நிகராக மாற்று நெடுஞ்சாலை ஒன்றை மத்திய சாலை போக்குவரத்துக்கழகம் உருவாக்க முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.