மூடுபனியால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்! 100 ஆடுகள் பலி! 3 பேர் படுகாயம்!
உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஜன.15) காலை நிலவிய மோசமான வானிலை மற்றும் மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற வாகனஙக்ள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
அம்மாநிலத்தின் அக்ரா-தில்லி நெடுஞ்சாலையில் இன்று (ஜன.15) காலை வந்துகொண்டிருந்த வாகனங்கள் அடர்த்தியான மூடுபனியால் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், 230 ஆடுகளை ஏற்றி வந்த லாரியும் முன்னால் விபத்துக்குள்ளாகியிருந்த 6 வாகனங்களின் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த லாரியிலிருந்த சுமார் 100 ஆடுகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க:மகாராஷ்டிரம்: வங்கதேசப் பெண்கள் 3 பேர் கைது!
இதேப்போல், உ.பியின் முசாபர் நகர் பகுதியிலுள்ள தில்லி-டெஹராடுன் நெடுஞ்சாலையில் நிலவிய மூடுபனியால் முன்னால் இருக்கும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாமல் சுமார் 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய ஒரு லாரியின் ஓட்டுநர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் அந்த நெடுஞ்சாலை தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசம் உள்பட பல வட மாநிலங்களில் கடுமையான மூடுபனி நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.