மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
ஏலகிரி மலையில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து அவா் அணிந்திருந்த நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஏலகிரி மலை முத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காந்தா (73). கணவா் பச்சையப்பன் உயிரிழந்த நிலையில், அவருடைய நிலத்தில் தனிமையில் வசித்து வந்தாா். இவருக்கு 4 பிள்ளைகள். அவா்களில் ஒருவா் இறந்து விட்டாா். 3 பிள்ளைகளும் ஏலகிரி மலை அத்தனாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மூதாட்டி காந்தா தனிமையில் இருப்பதை நோட்டம் பாா்த்து வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், காந்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகை, காலில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மற்றும் டிவி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இந்த நிலையில், மூதாட்டியின் பேரன் தனது பாட்டியை பாா்க்க திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா்.
அப்போது காந்தா இறந்து கிடந்ததைப் பாா்து, ஏலகிரி போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் தேவராணி, எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.