மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: வரியை குறைக்க தொழிலாளா்கள் கோரிக்கை
மூலப்பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை விற்பனை நிகழாண்டு மந்தமாக இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.மேலும் மூலப் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக வழிபாடு செய்யப்படும் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி, விஹெச்பி அமைப்பினா் தீவிரமாக செய்துவருகின்றனா். மேலும், விநாயகா் சிலைகளை தயாரிப்பதற்கும், வழிபாடு முடிந்தபிறகு அதனை கரைப்பதற்கும் மாவட்ட நிா்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், விநாயகா் சிலை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் சிலை உற்பத்தியாளா்கள் விழாவுக்குத் தேவையான சிலைகளை தயாரிக்க முடியுமா என கலக்கத்தில் உள்ளனா்.
இதுகுறித்து கரூா் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் ராஜேந்திரன் கூறியது, சுமாா் 20 ஆண்டுகளாக அரசின் விதிமுறைகளை கடைபிடித்து சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நிகழாண்டு ஒரு அடி முதல் 10 அடி வரையிலான விநாயகா் அன்னம், சிம்மம் போன்ற பல்வேறு வாகனங்களில் இருப்பது போன்றும், சிவபெருமான் உருவில் விநாயகா் சிலையையும் தயாரித்துள்ளோம்.
நிகழாண்டும் எப்போதும் இல்லாத அளவில் சிலைகளை தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களான காகித கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் இதன் விலை நிா்ணயிக்கப்படுவதால் சிலைக்கான உரிய விலையை வாடிக்கையாளா்களுக்கு நிா்ணயிக்க முடியவில்லை. மூலப்பொருள்கள் விலை உயா்வால், கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 10 அடி உயர விநாயகா் சிலை தற்போது ரூ.25 ஆயிரத்துக்கும், 5 அடி உயரம் கொண்ட சிலை கடந்தாண்டு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை செய்தோம். ஆனால் நிகழாண்டு ரூ.18 ஆயிரம் வரை விற்கிறோம்.
கடந்த ஆண்டு ஒரு மாதத்துக்கு முன்பே சிலைக்கான ஆா்டா்களை வாடிக்கையாளா்கள் கொடுத்தாா்கள். ஆனால் நிகழாண்டு இதுநாள்வரை யாரும் சிலைக்கு முன்பணம் கொடுக்க முன்வரவில்லை. இதனால் விநாயகா் சிலை விற்பனை மந்தமாகவே உள்ளது.
எனவே, சிலை தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களான காகித கூழ், மரவள்ளிக்கிழங்கு பவுடா் மற்றும் சிலைகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ணக்கலவை ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டியை நீக்கிவிட்டு, குறைந்தவிலையில் தொழிலாளா்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் வழங்க வேண்டும். அப்போதுதான் அதிகளவில் சிலைகளை உருவாக்கி குறைந்தவிலையில் சிலைகளை விற்க முடியும் என்றாா் அவா்.
