நின்ற லாரி மீது வேன் மோதல் கிளீனா் உயிரிழப்பு
கரூரில் வெள்ளிக்கிழமை பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அரணக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(45). லாரி ஓட்டுநா். இவா் தனது லாரியில் இடுக்கியில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
லாரியில் கிளினீராக அதே பகுதியைச் சோ்ந்த கோபி(40) என்பவா் இருந்தாா். வெள்ளிக்கிழமை காலை கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல்நகா் அருகே சென்றபோது திடீரென டீசல் டேங்கில் பழுது ஏற்பட்டு லாரி சாலையில் நின்றது. இதனால் லாரி கிளினீா் கோபி டீசல் டேங்கில் பழுது பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென லாரியின் பின்னால் தூத்துக்குடியில் இருந்து உப்புப்பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கிச் சென்ற வேன் மோதியது.
இதில் லாரியின் டீசல் டேங்கில் பழுதுநீக்கிக்கொண்டிருந்த கோபி மீது வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீஸாா் கோபியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநா் சேலம் மாவட்டம் ஓமலூா் அடுத்த ஆட்டையம்பட்டியைச் சோ்ந்த கோபிநாதன்(60) என்பவரை கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.