கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்ப...
மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் ஒருவர் பலி!
கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த 45 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமீபா காய்ச்சலால் இறந்தவர் சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதீஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்னைகளும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அமீபா தொற்றால் 11 பேர் நோயின் அறிகுறிகளுடன் சிகிச்சையில் உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில் மாநிலத்தில் அமீபா மூளைக் காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு கேரளம் முழுவதும் மொத்தம் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.
எப்படி பரவுகிறது?
சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம்.
சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.
நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.
சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது.
இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரைக் குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.