`மெக்டொனால்டில் பாத்திரம் கழுவி முதல் சம்பளம் வாங்கினேன்' - பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்மிருதி இரானி
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிவியில் நடிக்க வந்திருக்கிறார். அவர் தற்போது கியுங்கி சாஸ் பி கபி பஹு தி சீசன் 2ல் நடித்து வருகிறார். அவர் ராகுல் காந்தியை எதிர்த்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் நடிகை சோஹா அலிகானுடன் நடந்த நேர்காணலில், தனது பழைய வாழ்க்கை குறித்த விபரங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில்,''நான் பெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்து கொண்டபோது அதற்கு தேவையான பணத்தை எனது தந்தை கொடுத்தார். அவர் பணம் கொடுக்கும்போது அப்பணத்தை திரும்ப கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் கொடுத்தார்.

அந்த பணத்தை திரும்ப கொடுக்க எனது தந்தை ஒரு ஆண்டு கால அவகாசம் கொடுத்தார். எனவே அந்த கடனை அடைக்க நான் மெக்டொனால்டில் வேலைக்கு சேர்ந்தேன். முதலில் ஜெட் ஏர்வேஸில் விமான பணிப்பெண் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன்.
ஆனால் அந்த வேலைக்கு போதுமான பெர்சனால்டி இல்லை என்று என்னை நிராகரித்துவிட்டார்கள். எனவே மெக்டொனால்டில் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு சென்றேன். நேர்முகத்தேர்வின் இறுதிச்சுற்றில் நான் இருந்தபோது என்ன வேலை என்று கேட்டேன். தரையை துடைத்து பாத்திரங்களை கழுவவேண்டும் என்று சொன்னார்கள். சம்பளம் எவ்வளவு என்று கேட்டபோது மாதம் ரூ.1500 கொடுப்பதாக சொன்னார்கள். இடைவேளையின் போது ஒரு பர்கர் சாப்பிட கொடுப்பதாக சொன்னார்கள்'' என்றார்.
ஸ்மிரிதி இரானி டிவி நிகழ்ச்சியில் மிகவும் பிஸியாக இருந்தபோது நிலேஷ் மிஸ்ரா என்ற பத்திரிகையாளருடன் நடந்த பேட்டியில், தனது ஒரு நாள் சம்பளம் ரூ.1800 என்று குறிப்பிட்டு இருந்தார். ``எனது மேக்கப் கலைஞர் காரில் வருவார். ஆனால் நான் ஆட்டோவில் செல்வேன். அதன் பிறகு டிவி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவராக உயர்ந்தேன்''என்று குறிப்பிட்டு இருந்தார். இப்போது ஒரு எபிசோட்டிற்கு ஸ்மிருதி இரானி ரூ.14 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார். செய்திச்சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகை என்பதை ஸ்மிருதி இரானி ஒப்புக்கொண்டார். ஆனால் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.