மேகாலயா தேனிலவு கொலை: கணவரைக் கொல்ல உடந்தையான மனைவியின் உளவியல் சிக்கல்!
'மேகாலயா தேனிலவு கொலை' தான் எங்கெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த செய்திகளின் மற்றும் வீடியோக்களின் பின்னூட்டங்களில், 2006-ல் நடந்த 'மூணாறு தேனிலவு கொலையும் இப்படித்தான் நிகழ்ந்தது' என்றும் 'தேனிலவு சென்ற இடத்தில் கணவர் கொலை செய்யப்பட்டால் அதற்கு மனைவிதான் காரணமாக இருப்பார்' என்றும் எக்கச்சக்க கருத்துகள்.
இந்தக் கருத்துக்களில் இருக்கிற முன்முடிவுகள் 'வருங்காலத்தில் ஏதோ ஓர் அப்பாவி மனைவிக்கு எதிராக அமைந்துவிடலாமோ' என்கிற அச்சம் ஒருபக்கம் எழுகிறது. மறுபக்கமோ, 'மேகாலயா தேனிலவு கொலை'யில் இதுவரை கிடைத்த செய்திகளின்படி மனைவி சோனம்தான், கணவர் ராஜா ரகுவன்ஷி கொலைக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது தெரிகிறது.

மேகாலயா தேனிலவு கொலை
அது என்ன மேகாலயா தேனிலவு கொலை என்பவர்களுக்கு, அந்த சம்பவம் தொடர்பான சிறு அறிமுகம். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும், அவருடைய மனைவி சோனமும் தேனிலவுக் கொண்டாட மேகாலயா சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் காணாமல் (மே 23) போனதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர், ஜூன் 2-ம் தேதி 150 அடி ஆழமான ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உடல் ராஜா ரகுவன்ஷியினுடையது என்று அடையாளம் காணப்பட்டது.
அடுத்து, காணாமல் போன சோனத்தை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், ரகுவன்ஷி கொலைத்தொடர்பாக அவருடைய மனைவி உள்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது, தன் காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கணவரை கொல்வதற்கு ஏற்பாடு செய்ததே சோனம் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.
2006-ல் நடந்த மூணாறு தேனிலவு கொலை வழக்கிலும் சரி, தற்போதைய மேகாலயா தேனிலவு கொலை வழக்கிலும் சரி, திருமணத்துக்கு முந்தைய காதல்; விருப்பமில்லாத திருமணம்; காதலுடன் சேர்ந்து கணவனை திட்டுமிட்டுக் கொலை செய்தல் என பல சம்பவங்கள் ஒத்துப்போகின்றன. இரண்டு கொலை வழக்கிலுமே, பெற்றோர் திருமணம் செய்துவைத்த பெண்ணை அழைத்துக்கொண்டு ஹனிமூன் சென்றதைத் தவிர வேறு எதுவும் அறியாத அந்த ஆண்களின் மரண நிமிடங்களை நினைத்தால்தான் மிகுந்த வருத்தமாக இருக்கிறது.
விருப்பமில்லாத திருமணத்தைத் தவிர்ப்பது அல்லது நிறுத்துவதை விடுத்து, ஓர் உயிரை எடுக்கிற அளவுக்கு எது இந்தப் பெண்களை இயக்குகிறது என்று தெரிந்துகொள்வதற்காக மனநல மருத்துவர் ராமானுஜம் அவர்களிடம் பேசினோம்.

தற்கொலை போல தான் கொலையும்!
''ஒருவகையில் தற்கொலை போல தான் கொலையும். தற்கொலை செய்துகொண்டால், எப்படி அதற்கடுத்து தங்களுக்கு வாழ்க்கை இல்லையோ, அதேபோல கொலை செய்தாலும் வாழ்க்கையில்லை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், 'ஒருவேளை தப்பித்துக்கொண்டால்' என்கிற ஆப்ஷனை நம்பி இப்படியொரு செயலுக்குத் துணிகிறார்கள்.
இந்த விஷயத்தில், திருமண முடிவு பெண்களுடைய கையில் இல்லாததுதான் முக்கியமான காரணம். கல்யாணத்துக்கு முன்னால் பெண்களுடைய விருப்பத்தைக் கேட்பதில்லை. அதையும் மீறி பெண்கள் தங்கள் விருப்பத்தைச் சொன்னாலும் கட்டாயப்படுத்தி தாங்கள் பார்த்த ஆணுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர் பக்கத்து தவறு.
பெண் பக்கத்து தவறு என்று பார்த்தால், 'இந்த ஆணுடன் எனக்கு திருமணம் வேண்டாம்' என்பதில் பெண்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

தன்னுடைய நலம் மட்டுமே...
பெற்றோர்களை கன்வின்ஸ் செய்ய முடியாமலும், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறாமலும், திருமணம் செய்துகொண்டு கணவனைக் கொல்வதும் கோழைத்தனம்தான். காலங்காலமாக பல பெண்கள், மனதுக்குப் பிடிக்காத திருமணமே நிகழ்ந்தாலும், தங்களை வருத்திக்கொண்டு வாழத்தான் செய்தார்கள். அது எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததோ, அதைப்போன்றதே எங்கோ ஒருசிலர் இப்படி கணவனைக் கொல்வதும். இவர்களுக்கு தன்னுடைய நலம் மட்டுமே பெரிதாக தெரியும். அடுத்தவர்களின் வலியை உணர்ந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கும்.

இதில் இன்னொரு கோணம், அந்தக் காதலன் சம்பந்தப்பட்டப் பெண்ணை கொலை செய்யத்தூண்டும் அளவுக்கு மூளைச்சலவை செய்திருக்கலாம். மேலே சொன்ன அத்தனைக் காரணங்களும் சேர்ந்துதான், ஓர் அப்பாவி ஆணின் உயிரைப்பறித்திருக்கிறது'' என்கிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்.