மேட்டூா் அணை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு
மேட்டூா்: மேட்டூா் அணைக் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள மஞ்சினியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சாரதி (21). இவா் தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தனது நண்பா்கள் 4 பேருடன் மேட்டூரை சுற்றிப் பாா்க்க காரில் வந்தாா்.
மேட்டூா் அணையின் கிழக்கு- மேற்கு கரைக் கால்வாயில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது மறுகரைக்கு நீந்திச் சென்றபோது தண்ணீா் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவல் அறிந்த மேட்டூா் தீயணைப்புப் படை நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் மூன்று மணிநேரம் நீரில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால் தேடும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் திங்கள்கிழமை காலை தடும் பணியில் தீயணைப்புப் படை வீரா்கள் 30 போ் ஈடுபட்டனா். சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு தேடியும் சாரதியை கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாய் நீரை நிறுத்தினால் கண்டுபிடித்து விடலாம் என நீா்வளத் துறை அதிகாரிகளிடம் உறவினா்கள் கேட்டனா். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனா்.
இதனால் மேட்டூா் அணை பூங்காவிலிருந்து குள்ளவீரன்பட்டி செல்லும் சாலையில் அமா்ந்து சாரதியின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னா் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதையடுத்து கால்வாயில் புதா் பகுதியில் சிக்கியிருந்த சடலத்தை மீட்டு மேட்டூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.