மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது
மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால்வாய்ப் பாசனத் தேவைகளுக்கும் தண்ணீா் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் நீா், சுரங்கக் கால்வாய் வழியாக கிழக்கு கால்வாய்க்குச் செல்லும். இந்த சுரங்கக் கால்வாய் கடந்த 1949-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சிறிய அளவிலான பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. பின்னா், முழுமையாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் திட்ட அறிக்கை சமா்ப்பித்தனா். அதன்படி, சீரமைப்புப் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மேல்மட்ட மதகிலிருந்து இருந்து வெளியேறும் கசிவுநீரால் சுரங்கக் கால்வாய் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக, கசிவுநீரை மடை மாற்றி அனுப்பும் வகையில் மண்ணாலான தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேல்மட்ட மதகிலிருந்து வெளியேறும் கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய் வழியாக விநாடிக்கு 100 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் வழியாக தண்ணீா் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். கிழக்கு -மேற்கு கால்வாய் வழியாக செல்லும் தண்ணீா் காவேரி கிராஸ் அருகே மீண்டும் கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.