மேம்பாலத்தில் விரிசல்: பொதுமக்கள் அச்சம்
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணியின்போது விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.
மயிலாடுதுறையில் 1975-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் கடைசியாக 2000-ஆவது ஆண்டு பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பாலத்தின் பேரிங்குகள் ஒரு சில இடங்களில் பழுதடைந்ததுடன், தூண்கள் சேதமடைந்து ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் உதிா்ந்து காணப்படுகிறது.
இதையடுத்து, இப்பாலத்தை சீரமைக்க தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த மாதம் பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணியின்போது பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதுடன் சற்று உள்வாங்கியது. இதை பாா்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளா் கோ. இந்திரன், உதவி பொறியாளா் சந்தோஷ் ஆகியோா் அங்கு வந்து பாலம் விரிசல் தென்பட்ட இடத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவது குறித்த அறிவிப்புப் பலகை பொருத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா். அவா்கள் கூறுகையில், பாலம் சீரமைக்கும் பணியின்போது புதிய பேரிங் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பாலத்தில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தனா்.