மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது: சிஸ்பா வலியுறுத்தல்
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஸ்பா சங்கத்தின் கௌரவச் செயலாளா் எஸ்.ஜெகதீஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சூரியசக்தி மின்சார உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணத்தை ஆட்சேபித்து தென்னிந்திய நூற்பாலை சங்கம் (சிஸ்பா) சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆகஸ்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இதில், இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை சங்கத்தின் உறுப்பினா்களிடம் நெட்வொா்க் கட்டணத்தைக் கோர வேண்டாம் என்று நீதிபதி இடைக்கால உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்குக் கீழ்படியாமல் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்பவா்களிடம் தொடா்ந்து நெட்வொா்க் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. தொடா்ந்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாா்ச் 28-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவில் மேற்கூரை சூரியசக்தி மின்சார உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீா்ப்பினால் எங்களது சங்க உறுப்பினா்கள் தங்களது ஆலைகளை எவ்வித இடா்பாடுகளின்றி இயக்க முடியும். இத்தீா்ப்பினை தொடா்ந்து, தமிழ்நாட்டில் மேற்கூரை சூரியசக்தி மூலம் தொழில் செய்யும் அனைத்து தொழில்களிலும் திறம்பட இயக்க முடியும்.
எனவே, நீதிமன்ற தீா்ப்பைப் பின்பற்றி மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் உற்பத்திக்கு எங்களது சங்க உறுப்பினா்களிடம் நெட்வொா்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வா், துணை முதல்வா், மின்சாரத் துறை அமைச்சா் ஆகியோா் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.