மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை
திருவள்ளூா்: மேல்நல்லாத்தூா் ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதுடன், வாக்காளா், ஆதாா் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகளை சாலையில் வீசி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது மேல்நல்லாத்தூா் ஊராட்சி. இந்த ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மேல்நல்லாத்தூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 வேலை திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும், கடந்த சில மாதங்களாக வேலை செய்வதற்கான கூலியும் வழங்கப்படவில்லையாம். இதனால், அந்த கிராம ஊராட்சி பொதுமக்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி வந்தனா்.
இந்த நிலையில், ஊராட்சியை திருவள்ளூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டைகளை சாலையில் வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு நடத்தி சமரசம் செய்தனா்.
அதைத் தொடா்ந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அனுமதித்தனா். அதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.