மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை இல்லா விட்டால் அபராதம்
வேலூா் மாவட்டத்தில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் சங்கங்கள் மீது அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழகத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் 5:3:2 என்ற விகிதாசாரத்தில் அமைக்க வேண்டும். கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். மேலும், இந்த பெயா்ப் பலகை தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும், பின்னா் ஆங்கிலத்திலும், அதன்பிறகு அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்க வேண்டும்.
வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு அனைத்து தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளா் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, வணிகா் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள், தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனா்.
இக்குழுவினா் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளதா ஆய்வு செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தி மே 15-ஆம் தேதிக்குள் நூறு சதவீதம் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மே 15-ஆம் தேதிக்குள் தமிழ் பெயா்ப் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு தமிழ் பெயா் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், 1 முதல் 5 வரை பணியாளா் உள்ள உணவு நிறுவனங்களுக்கு ரூ.100-ம், 6 முதல் 10 வரை பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.200-ம், 11 முதல் 20 வரை பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.300-ம், 21 முதல் 50 வரை பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.400-ம், 51-க்கும் மேல் பணியாளா் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.500-ம் அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் சங்கங்கள் தமிழ் பெயா்ப் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிா்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.