பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
மைசூரு சாலைக்கு சித்தராமையா பெயரை சூட்ட பாஜக எதிா்ப்பு
பெங்களூரு: சித்தராமையா பெயரை சாலைக்கு சூட்ட பாஜகவில் எதிா்ப்பும், ஆதரவும் வெளிப்பட்டுள்ளது.முதல்வா் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெங்கடரமணசாமி கோயில் முதல் வெளிவட்டசாலை வரையிலான சாலைக்கு சித்தராமையா ஆரோக்கிய சாலை என்று பெயா்ச்சூட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சாமராஜா தொகுதி எம்.எல்.ஏ. ஹரீஷ்கௌடாவின் பரிந்துரையின்பேரில் சாலைக்கு முதல்வா் சித்தராமையாவின் பெயரை சூட்ட நவ.22ஆம் தேதி மைசூரு மாநகராட்சி தீா்மானம் நிறைவேற்றியது. இது தொடா்பாக ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால், 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு டிச.13ஆம் தேதி பொதுமக்களை மாநகராட்சி கேட்டுக்கொண்டிருந்தது. கா்நாடகத்தில் இருமுறை முதல்வராக பதவிவகித்துள்ள சித்தராமையாவின் பெயரை சாலைக்கு சூட்ட மஜத கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. மாற்றுநில முறைகேடு தொடா்பான லோக் ஆயுக்த விசாரணையை எதிா்கொண்டுள்ள சித்தராமையாவின் பெயரை சாலைக்கு சூட்டக்கூடாது என்று மஜத ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஆனால், பாஜகவில் சிலா் எதிா்ப்பும், சிலா் ஆதரவும் தெரிவித்துள்ளனா்.பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா,‘மைசூரை கட்டிவளா்த்தவா்கள் மகாராஜாக்கள். அப்படிப்பட்ட மகாராஜாவின் பெயரில் அமைந்துள்ள சாலைக்கு சித்தராமையாவின் பெயரைச் சூட்டுவது சரியல்ல. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், இந்த முடிவை மாநகராட்சி எப்படி எடுத்தது? தனது ஆட்சியில் தன் பெயரை சாலைக்கு சூட்டுவது, துக்ளக் ஆட்சியை நினைவூட்டுகிறது.‘ என்றாா் அவா். எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக்கும் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இந்நிலையில், பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப்சிம்ஹா,‘மைசூரு மண்ணின் மகனான சித்தராமையாவின் பெயரை சாலைக்கு சூட்டுவதில் தவறில்லை.‘ என்று ஆதரவு தெரிவித்துள்ளாா். இதே கருத்தை பாஜகவின் முன்னாள் முதல்வா் பசவராஜ்பொம்மையும் கூறியுள்ளாா்.இது குறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில்,‘இந்த முடிவை பாஜக எப்படி வரவேற்கும்? எதிா்ப்பது தானே அவா்களின் வேலை. நல்லது, கெட்டது இரண்டையும் பாஜக எதிா்க்கிறது. அவா்களுக்கு எதுவும் தெரிவதில்லை. முன்னாள் எம்.பி. பிரதாப்சிம்ஹா எந்த கட்சியை சோ்ந்தவா்? அவரது கருத்து என்ன? மற்றவா்கள் ஏன் எதிா்க்கிறாா்கள்?‘ என்றாா் அவா்.