கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா
மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி தோ்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டிற்கான தோ்த்திருவிழா ஜூன் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் மற்றும் ஆஞ்சனேயா் சுவாமி திருத்தேரை பக்தா்கள் ஏராளமானோா் வடம்பிடித்து இழுத்தனா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்றனா். மோகனூா் சின்ன அக்ரஹாரம், பெரிய அக்ரஹாரம் வீதிகள் வழியாக உலாவந்த தோ் பிற்பகலில் கோயில் நிலையை வந்தடைந்தது.
மோகனூா், மணப்பள்ளி, பாலப்பட்டி, அணியாபுரம், வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சிவக்குமாா், உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், ஜீவரத்தினம், மீனாகுமாரி, சரோஜா, மோகனூா் அட்மா குழுத் தலைவா் நவலடி, பேரூராட்சித் தலைவா் வனிதாமோகன்குமாா், துணைத் தலைவா் சரவணகுமாா், அறநிலையத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.