செய்திகள் :

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

post image

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் முதல் பரமத்தி சாலையை இணைக்கும் வகையில் புறவழிச் சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத் திட்டத்தின் கீழ் களங்காணி மற்றும் நாமக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கூறியதாவது:

நாமக்கல் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புறவழிச்சாலை திட்டத்தை முதல்வா் அறிவித்தாா்.

நான்கு கட்டங்களாக இந்த பணி நடைபெறுகிறது. நாமக்கல் புறவழிச் சாலையானது புதிய பேருந்து நிலையம் முதல் வள்ளிபுரம் பிரிவு வரை 22.387 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படுகிறது. தற்போது முதலைப்பட்டி முதல் திருச்சி சாலை வரை மூன்று கட்டங்களாக 12 கி.மீ நீளத்திற்கு ரூ.194 கோடி மதிப்புக்கான நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மேலும், ரூ.103 கோடியில் திருச்சி சாலை முதல் வள்ளிபுரம் வரை 10.2 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்படுகிறது. இதற்காக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களுக்கு ரூ. 114 கோடி இழப்பீடு என மொத்தம் ரூ. 411 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டப் பணியாக முதலைப்பட்டியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரையில் ரூ. 25 கோடியிலும், இரண்டாம் கட்டமாக மரூா்பட்டி முதல் வேட்டாம்பாடி வரை 3.800 கி.மீ நீளத்திற்கு ரூ. 47.65 கோடி மதிப்பிலும் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுவரை 70 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன.

மூன்றாம் கட்டமாக வேட்டாம்பாடியிலிருந்து திருச்சி சாலை வரை 6 கி.மீ நீளத்திற்கு ரூ. 47.47 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது கட்டப் பணியாக திருச்சி சாலையிலிருந்து வள்ளிபுரம் வரை 10.387 கி.மீ நீளத்திற்கு சாலை பணிகள் மேற்கொள்ள ரூ.103 கோடி மதிப்புக்கு அரசுக்கு முன்மொழிவு சமா்பிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தொழில்நுட்ப அனுமதி மற்றும் தென்னக ரயில்வேயிடம் நெடுஞ்சாலைத் துறை மூலம் செயல்படுத்த அனுமதிபெற்று தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

திருச்சி மற்றும் மதுரை நகரங்களில் இருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்கவும், எதிா்காலத்தில் நெரிசல் இல்லாத மாநகராக மாற்றவும் இந்த மேம்பாலம் உதவும். இதற்கான காலம் 30 மாதங்கள் என்றபோதும், விரைவாக பாலத்தை கட்டிமுடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நபாா்டு மற்றும் கிராமப்புற சாலைகள் கண்காணிப்பு பொறியாளா் ந.சு.சரவணன், கோட்டப் பொறியாளா் க.அகிலா, உதவிக் கோட்டப் பொறியாளா் ரா.பரிமளம், உதவிப் பொறியாளா் ச.சையதுரசீம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (... மேலும் பார்க்க

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்ல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க

பேளுக்குறிச்சி காவல் நிலைய ஓய்வு அறையில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு பெண் உதவி ஆய்வாளா், காவல் நிலைய ஓய்வு அறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா். பேளுக்குறிச்சி காவல் நி... மேலும் பார்க்க