மோட்டாா் சைக்கிள்கள் மோதல் இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். இருசக்கர வாகனம் ஓட்டிவந்த சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறாா்.
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மகன் சிவசெல்வன் (24). தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்துவந்தாா். கும்பகோணத்தில் பணிமுடிந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தாா். கும்பகோணம் - சாக்கோட்டை மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே சிவபுரம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ஜெகன் மகன் ஜெகதீஸ்வரன் (17) என்ற சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்தபோது, சிவசெல்வன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மேலும், ஜெகதீஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.