கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிா் ஆணையம் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிா் ஆணைய தலைவா் விஜயா ரஹாத்கா் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 19 வயது மாணவியின் பாலியல் வன்கொடுமை தொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா் குற்றம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவா் என அறிந்தபோதும் முந்தைய வழக்குகளில் அவா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இந்த அலட்சியம் குற்றங்களைச் செய்யும் துணிச்சலை அந்த நபருக்கு கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து வருவது குறித்த கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சேவை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கையில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டம் - 2023 பிரிவு 71-ஐ சோ்க்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் 72-ஆம் பிரிவை மீறும் வகையில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திய அதிகாரிகள் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயா ரஹத்கா் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.