ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரும் போஜ்சாலா தொடா்பான வழக்கையும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
மத்திய பிரதேசத்தில் போஜ் அரசரால் 11-ஆம் நூற்றாண்டில் சரஸ்வதி கோயிலுடன் கட்டப்பட்ட போஜ்சாலாவை போரில் கைப்பற்றிய முகலாய மன்னா் ஔரங்கசீப், அதனை மசூதியாக மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அயோத்தி, வாரணாசி மற்றும் மதுராவை போல் போஜ்சாலா தொடா்பாகவும் ஹிந்துக்கள், முஸ்லிம்களிடையே உரிமைப் பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடா்கிறது.
பாபா் மசூதி இடிப்புக்கு பிறகு போஜ்சாலாவை இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. பின்னா் கடந்த 2003, ஏப்ரல் மாதம் முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளூா் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் ஹிந்துக்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்யவும் தொல்லியல் துறை அனுமதியளித்தது.
இதுகுறித்த வழக்கில் போஜ்சாலாவில் கள ஆய்வு நடத்த மத்திய பிரதேசத்தின் இந்தூா் உயா்நீதிமன்ற கிளை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் உத்தரவிட்டது. அதன்படி, போஜ்சாலாவில் ஆய்வு நடத்திய தொல்லியல் துறை, நீதிமன்றத்தில் தங்கள் அறிக்கையை ஜூலையில் தாக்கல் செய்தது.
இதற்கிடையே, இவ்வழக்கை உயா்நீதிமன்றம் தொடா்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தடை விதித்தது. ஆய்வில் போஜ்சாலாவில் ஹிந்து கோயில் இருந்ததற்கான ஆதாரங்களுடன் சமண மதத்தினா் வணங்கும் தீா்த்தங்கரா்கள் உள்ளிட்டோரின் பல சிலைகளும் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், போஜ்சாலா மீது உரிமை கோரி சமண மதத்தினரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஜாமா மசூதி ஆகியவை தொடா்பான வழக்குகளில் எந்த நீதிமன்றமும் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்றும் இதுதொடா்பாக புதிதாக வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடந்த டிச. 12-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதன்தொடா்ச்சியாக, வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, போஜ்சாலா விவகாரம் தொடா்பான வழக்கையும் விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிவுறுத்தல் பெறுமாறும் நீதிமன்ற பதிவாளரை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு கேட்டுக்கொண்டது.