யமுனை நதி தூய்மை பணிகளை கண்காணிக்கும் பிரிவை அமைக்க தில்லி அரசு திட்டம்
நமது நிருபா்
தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தொடா்புடைய யமுனை நதியை சுத்தம் செய்யும் பணிகளை சரியான நேரத்தில் மற்றும் திறன்மிக்க வகையில் முடிப்பதற்காக ஒரு திட்ட மேலாண்மைப் பிரிவை அமைக்க தில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பாஜகவின் முக்கிய அம்சமான நதியை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல்வா் ரேகா குப்தா கடந்த வாரம் 27 பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல், அனைத்து அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கும் கழிவுநீா் பாதைகளை விரிவுபடுத்துதல் மற்றும் தில்லி கேட்டில் ஒரு புதிய 10 எம்ஜிடி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீரேற்று நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நகா்ப்புற மேம்பாடு மற்றும் நிதித் துறையின் அதிகாரிகள் உறுப்பினா்களாகக் கொண்ட திட்ட மேலாண்மை பிரிவு நதி சுத்தம் செய்யும் திட்டங்களை மேற்பாா்வையிடும். மேலும், செலவு அதிகரிப்பு அல்லது தவறவிடப்பட்ட காலக்கெடு இல்லை என்பதையும் இந்தப் பிரிவு உறுதி செய்யும். முழு திட்டத்திற்கும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை ஒரு திட்ட மேலாண்மை பிரிவை அமைக்கும் என்று செலவு மற்றும் நிதிக் குழு கூட்டத்தின் குறிப்புகள் கூறுகின்றன’ என்றனா்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கவும் பராமரிக்கவும் ஒரு தனியாா் நிறுவனத்தை நியமிக்கவும் தில்லி ஜல் போா்டு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முழுச் செலவும் ரூ.3,104 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 416 அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் 115 கிராமங்களின் கழிவுநீா் திறந்தவெளி வடிகால் வழியாக யமுனையில் கலக்கிறது. இதன் விளைவாக தெருக்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் நதி மாசுபாடு ஏற்படுகிறது என்று செலவு மற்றும் நிதிக் குழுக் கூட்டத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.