யானைகளுக்கு கரும்பு, பாகன்களுக்கு குடியிருப்பு! - முதல்வர் ஸ்டாலின் முதுமலை ட்ரிப் அப்டேட்ஸ்..
நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான 127 - ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியை நாளை ( 15-05-2025) காலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நேற்று மனைவியுடன் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.
தமிழ்நாடு வனத்துறைக்கு 32 ஜீப்களை வழங்கி கொடியசைத்த முதலமைச்சர், மாவூத் வில்லேஜ் என்ற பெயரில் தெப்பக்காடு பகுதியில் யானை பாகன்களுக்காக கட்டப்பட்டிருக்கும் பிரத்யேக குடியிருப்புகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பாகன்களுக்கான குடியிருப்பு குறித்து தெரிவித்த வனத்துறையினர், "5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 44 குடியிருப்புகள் யானை பாகன்களுக்காக கட்டப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட இந்த குடியிருப்பினை முதலமைச்சர் திறந்து வைத்தார். பழங்குடி மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் மேலும் விரிவு படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார் " என்றனர்.