யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததால், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1.37 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 33 வயதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் (ஹரியாணா) அடங்குவார்.
இவர், பாகிஸ்தானுக்கு செல்ல ஏஜென்ட் விசா பெறும்போது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக, பாகிஸ்தானில் உளவு நிறுவனங்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று, அதனை விடியோவாக யூடியூப் தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால், பாகிஸ்தானுக்கும் சென்று விடியோ எடுப்பது போன்று, அங்கிருந்தவர்களுடன் பழக்கத்தை பலப்படுத்திக் கொண்டார்.
மேலும், அவர்களுடன் வாட்ஸ்ஆப், டெலிகிராம், ஸ்னாப்சாட் முதலான செயலிகள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், சந்தேகம் ஏற்படாமலிருக்க, அவர்களின் எண்களை இந்துக்கள் பெயர்களில் பதிவு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இந்திய ராணுவம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பல தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் ஜோதி மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டதாகக் கூறுகின்றனர். மக்கள் அதிகமாகக் கூடும் சுற்றுலாத் தலங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள், கட்சிக் கூட்டங்கள் பற்றிய தகவல்களை இவர் பகிர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஜனவரி மாதம் பஹல்காம் சுற்றுலாத் தலத்துக்கு சென்ற ஜோதி மல்ஹோத்ரா, அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் சென்றதாக செய்திகள் பரவி வருகின்றன.
இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக ராணுவத் தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தமையால், ஜோதி மல்ஹோத்ரா மீது அதிகாரபூர்வ ரகசியச் சட்டம், 1923 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இவர் மட்டுமின்றி, கல்லூரி மாணவரான தேவேந்தர் சிங், பாதுகாப்புக் காவலர் நௌமன் இலாஹி, குசாலா, பானு நஸ்ரீனா, யாமீன் முகமது உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.