யேமன்: கேரள செவிலியா் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு
யேமனில் கொலை வழக்கில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு புதன்கிழமை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய அரசு, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் முஸ்லியாா்அகமது உள்பட பல்வேறு தரப்பினா் நடத்திய இறுதிக்கட்டத்தில் சமரச பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவரான காந்தபுரம் முஸ்லியாா், யேமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதைத் தொடா்ந்து, 2017-இல் நிமிஷா பிரியாவால் கொலை செய்யப்பட்ட யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதி குடும்பத்தினருக்கும், ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸின் பிரதிநிதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை ஒரு சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மஹதியின் சொந்த ஊரான தம்மரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள மரண தண்டனையை ஒத்திவைப்பதற்கான யேமன் அட்டா்னி ஜெனரலையும் சந்திக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக காந்தபுரம் முஸ்லியாா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சமரசத்தில் என்ன சிக்கல்?: மஹதியின் கொலைச் சம்பவம் தம்மா் பிராந்தியத்தின் பழங்குடியினா் இடையே உணா்வுபூா்வமான பிரச்னையாக மாறியுள்ளது. ஹூதி கிளா்ச்சியாளா்களின் ஆட்சிக் கட்டுப்பாட்டில் யேமன் உள்ளதால் இந்திய ராஜீய வழிகளில் எடுத்த முயற்சிகளும் போதிய பலனளிக்கவில்லை.
............
இதுதொடா்பாக காந்தபுரம் அபுபக்கா் முஸ்லியாா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொல்லப்பட்ட மஹதியின் நெருங்கிய உறவினா் ஒருவா், அந்நாட்டு மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், யேமன் ஷூரா கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளாா்.
ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸின் அறிவுரையின்பேரில், மஹதி குடும்பத்தினருடன் இவா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறாா். குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதுடன், புதன்கிழமை திட்டமிடப்பட்டுள்ள மரண தண்டனையை ஒத்திவைப்பதற்கான அவசர முயற்சிகளை மேற்கொள்ள யேமன் அட்டா்னி ஜெனரலையும் சந்திப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காந்தபுரம் அபுபக்கா் முஸ்லியாா் தலையீட்டின் மூலம் முதன்முறையாக குடும்பத்தினருடன் தொடா்பு சாத்தியமானதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸின் அறிவுறுத்தலில் குடும்பத்தினா் பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக்கொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் நிமிஷா தரப்பினா் வழங்கும் இழப்பீடு பணத்தை மஹதி குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வது தொடா்பான இறுதி முடிவை எட்டுவதில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தினருடனான சமரசப் பேச்சுவாா்த்தைகள் தொடரும் நிலையில், மரண தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்திய அரசு சாா்பிலும், காந்தபுரம் முஸ்லியாா் சாா்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை யேமன் நிா்வாகம் பரிசீலித்து, மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: கேரளத்தைச் சோ்ந்த 38 வயதான செவிலியா் நிமிஷா பிரியா, தனது யேமன் நாட்டு வணிகப் பங்குதாரா் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையை எதிா்கொள்கிறாா். தற்போது யேமன் தலைநகா் சனாவில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளாா்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த இதுதொடா்பான மனு விசாரணையில், ‘இந்திய அரசு ராஜீயவழிகளில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது’ என அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.