ரத்தன் டாடா எழுதிய உயில்; கடன்கள் தள்ளுபடி, பணியாளர்கள், நண்பர்கள்.. யாருக்கு என்ன கிடைக்கும்?
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வீட்டு மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கிட்டதட்ட ரூ.3.5 கோடி கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதியுள்ளார். இந்த உதவியாளர்களில் அவரது பியூன் முதல் அவரது காரை சுத்தம் செய்பவர் வரை அடக்கம்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயிலின் படி,
அவரது ஊழியர்களுக்கும், அண்டை வீட்டாருக்கு கொடுத்த கடன்கள் தள்ளுபடி.
ரத்தன் டாடாவிடம் ஏழு ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்தவர்களுக்கு அவர்களது பணிக்காலத்திற்கு ஏற்ப ரூ.15 லட்சமும், பகுதி நேர உதவியாளர்கள் மற்றும் கார் சுத்தம் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் கொடுக்க வேண்டும்.

அவரது பிராண்டட் ஆடை தொடங்கி ஷூக்களை வரை ஏழைகளுக்கு உதவும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.
அவரது சமையல்காரர் ராஜன் ஷாவிற்கு கொடுத்த ரூ.1.51 கோடி கடனும், சுப்பையா கோனாரின் ரூ.66 லட்சம் கடனும், செயலாளர் டெல்னாஸ் கில்டருக்கு கொடுத்த ரூ.10 லட்ச கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கார்னெல் பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ படிப்பிற்காக அவரது நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடுவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடி கடனும் தள்ளுபடி.
ஓட்டுநர் ராஜூ லியோனுக்கு ரூ.1.5 லட்சம், டாடா அறக்கட்டளை ஆலோசகர் ஹோஷி டி மலேசாராவுக்கு ரூ.5 லட்சம், லிபாக் பங்களா பராமரிப்பாளர் தேவேந்திர கட்டமெல்லுவுக்கு ரூ.2 லட்சம், தனிப்பட்ட உதவியாளர் தீப்தி திவாகரனுக்கு ரூ.1.5 லட்சம், பியூன்கள் கோபால் சிங் மற்றும் பாண்டுரங் குராவ் ஆகியோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும். ஓட்டுநர் ராஜூ லியோனுக்கு வழங்கப்பட்ட ரூ.18 லட்சம் கடன் தள்ளுபடி.
ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் டிட்டோ ராஜன் ஷாவால் தத்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் பரமாரிப்பு செலவிற்கு காலாண்டிற்கு ரூ.30,000 என ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படிக்க அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஜேக் மாலைட்டுக்கு வழங்கப்பட்ட ரூ.23.7 லட்சம் கடனும் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
இந்த உயிலை ரத்தன் டாடாவின் நண்பர் மெஹ்லி மிஸ்திரி மற்றும் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் டேரியஸ் கம்பாட்டா நிறைவேற்ற உள்ளனர். அதற்காக பாராட்டு பரிசாக இவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள கடன்கள் எதுவும் சொத்திற்கு உரியதாகக் கருதப்படக் கூடாது. கடனை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. இது ஊழியர்கள் அல்லது ஓட்டுநர்களுக்கு ரத்தன் டாடா வழங்கிய உயில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
