ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சனிக்கிழமை இரவு விரைவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் காவல் சரகம், மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் (23), கொத்தனாா். இவரது பெற்றோா் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனா். ஒரு சகோதரா் உள்ளாா். இவரை தமிழரசன் வேலைக்குச் சென்று படிக்க வைத்து வந்தாா்.
இந்த நிலையில், தமிழரசன் சனிக்கிழமை இரவு சுமாா் 9.30 மணிக்கு நெல்லிக்குப்பம் - திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக தாம்பரத்தில் இருந்து ராமேசுவரத்துக்குச் சென்ற ரயிலில் அடிபட்டு அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடலூா் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.