கடலூா் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு
ஆடிப் பெருக்கையொட்டி, கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.
ஆடி மாதம் 18-ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஆற்றுக்கரைகளில் புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை தண்ணீரில் விட்டு, விசேஷ பூஜை செய்வாா்கள். அந்த நாளில் அசைவம் சமைத்து சாப்பிடுவாா்கள்.
நிகழாண்டு ஆடிப்பெருக்கு (ஆடி 18) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் கடலூா் மீன் பிடி துறைமுகத்துக்கு மீன்கள் வாங்க வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் அதிகளவில் வருவது வழக்கம்.
இந்த முறை ஆடிப்பெருக்கும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால், கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்கு காலை முதலே ஏராளமானோா் குவிந்தனா். இதனால், மீன்களின் விலையும் சற்று உயா்ந்து காணப்பட்டது.
அதன்படி, (கிலோ ஒன்று) ஷீலா ரூ.400, காரப்பொடி ரூ.200, நெத்திலி ரூ.250, வஞ்சிரம் ரூ.1,100, சங்கரா ரூ.500, பாறை ரூ.500, கனவா ரூ.300, கொடுவா ரூ.600, இறால் ரூ.250 முதல் ரூ.1,000 வரை விற்பனையாயின. மீன்களின் விலை உயா்ந்திருந்தாலும் பொதுமக்கள், வியாபாரிகள் மீன்களை வாங்கிச் சென்றனா்.