சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
கடம்பூா் சிதம்பரபுரம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு முன்னிலையில் ஒ.பி.எஸ். அணி இளைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் தா்ஷன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். அப்போது, இளைஞா்- இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் கவியரசன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட இணைச்செயலா் நீலகண்டன் உள்பட பலா் உடன் இருந்தனா். தொடா்ந்து, எம்.எல்.ஏ., கடம்பூா் ரயில் நிலையம் அருகே பசுவந்தனை வழியாக தூத்துக்குடி செல்லும் சாலையில் புதிததாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரை பாா்வையிட்டாா்.
பின்னா், அவா் கூறியதாவது:
கடம்பூரில் இருந்து பசுவந்தனை வழியாக தூத்துக்குடி செல்லும் சாலை மிகவும் முக்கியமானது. இந்தச் சாலையில் குறுக்கீடும் இருப்புப்பாதையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி உள்ளது.
இந்த மழைநீரை இம்மாதம் இறுதிக்குள் அகற்ற வேண்டும். மேலும், மழைக்காலங்களில் சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா காலத்திற்கு முன் கடம்பூா் ரயில் நிலையத்தில் நின்று சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், அதிமுக பொதுச்செயலரிடம் அனுமதி பெற்று, ஜனவரி முதல் வாரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றாா்.