ராகுல் காந்தி: `குஜராத் கட்சிகள் பெற்ற ரூ.4300 கோடி நன்கொடை என்ன ஆனது'- தேர்தல் ஆணையம் விசாரிக்குமா?
குஜராத் மாநிலத்தில் உள்ள 10 சிறிய முகம் தெரியாத கட்சிகள் 2019-20 மற்றும் 2023-24 கால கட்டத்தில் ரூ.4300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான ஊடக அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்திலாவது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா அல்லது பிரமாணப் பத்திரம் கேட்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் இந்த கட்சிகள் 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளன. ஆனால் இவற்றில் வெறும் 43 வேட்பாளர்களை நிறுத்தி 54,069 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாகக் கூறுகின்றன.
தேர்தல் அறிக்கையின்படி இந்தக் கட்சிகள் ரூ.39.02 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், ஆனால் வருடாந்திர நிதி தணிக்கையில் ரூ.3500 கோடி எனக் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்த கட்சிகள் மிகக் குறைவாகவே தேர்தலில் போட்டியிட்டிருக்கிறன, செலவு செய்திருக்கின்றன. இவர்கள் பெயரையே யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் ஆனால் 4300 கோடி நன்கொடை பெற்றுள்ளனர்." என இந்தியில் எழுதிய பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அத்துடன், "இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? அவற்றை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது? இதையாவது தேர்தல் ஆணையம் விசாரிக்குமா - அல்லது இங்கேயும் பிரமாணப் பத்திரம் கேட்குமா? அல்லது சட்டத்தை மாற்றி தரவுகள் மறைக்கப்படுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரில் ராகுல் காந்தி 'வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் மூலம் வாக்குகள் திருடப்படுவதாக' தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம் வைத்து யாத்திரை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.