ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் கடைசி மகன் அலெக்ஸ் பாண்டியன் மாற்றுத்திறனாளி. அவரைத் தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் அய்யாசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிழைப்புக்காகப் பசுமாடு வளர்த்து தொழில் செய்துவந்தார் சுந்தராம்பாள்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பசுமாட்டின் தீவனத்திற்குப் புல் அறுப்பதற்காக அப்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தன் மகனுடன் சுந்தராம்பாள் சென்றுள்ளார். பங்களா காடு எனும் பகுதியில் கிடைத்த புற்களை அறுத்து எடுத்துக்கொண்டு மாட்டுக்குத் தீவனம் வைப்பதற்காக அலெக்ஸ் பாண்டியன் கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் காட்டுப்பகுதிக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, தனது தாய் சுந்தராம்பாள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்தவர்களை அலெக்ஸ் பாண்டியன் உதவிக்கு அழைத்துள்ளார். அவரின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் இருவரையும் மீட்டுப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் சுந்தராம்பாள் இறந்த கிடந்த இடத்தில் ஆய்வுசெய்ததில் காட்டெருமை வந்து சென்றதற்கான தடயங்கள், காலடித் தடங்கள் இருந்துள்ளன. இதுதவிர சுந்தராம்பாள் உடலில் பல்வேறு இடங்களிலும் மாடு முட்டியதற்கான ரத்தக்காயங்களும் வீக்கங்களும் இருந்துள்ளன.
இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த சேத்தூர் போலீஸார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். மேலும் சுந்தராம்பாள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play