ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை(ஜூலை 23) மாலை தொடங்கியது. இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா் நடைபெற்ற விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர், இளையராஜாவின் சிவ பாடல்கள் மழைக்காலத்தில் பக்தி நிரம்பியதாக இருந்தது. காசியின் பிரதிநிதியான இந்த சிவ கோஷம் புல்லரிப்பை தருகிறது. 140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில் வேண்டினேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனேன். ராஜராஜன், ராஜேந்திரன் இரு பெயர்கள் பாரதத்தின் அடையாளம். சிவனை வணங்குபவர் சிவனிலேயே கரைந்து விடுகிறார். பெருவுடையாரை வணங்க கிடைத்த வாய்ப்பு பெரும் பேறு. இலங்கை, மாலத்தீவு, தென் கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழப் பேரரசு. பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று சோழ சாம்ராஜ்ஜியம், ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி. பிரட்டிஷார் அல்ல, ஜனநாயகத்தின் முன்னோடிகள் சோழர்களே.
இன்று உலகம் பேசும் நீர் மேலாண்மைக்கும் முன்னோடிகள் சோழர்கள். கங்கையின் மகத்துவத்தை உணர்ந்திருந்தவர் ராஜேந்திரன். காவிரி கரைக்கு கங்கை கரையில் இருந்து வந்துள்ளேன். ராஜேந்திர சோழன் கங்கை நீரைக் கொண்டு வந்து பொன்னேரியில் நிரப்பினார். நான் காசியின் பிரதிநிதி, கங்கையின் மகன், காவிரி கரைக்கு கங்கை நீரைக்கொண்டு வந்திருக்கிறேன். காசியில் இருந்து இங்கு கங்கை நீரை எடுத்த வந்தது எனக்கு பெருமையாக உள்ளது. உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழீஸ்வரம். உலகம் முழுவதும் பேசும் நீர்மேலாண்மைக்கும் சோழர்களே முன்னோடிகள். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாச்சாரத்தோடு இணைந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை, அன்பே சிவம். அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை. இன்றைய பாரதம் அதன் கடந்த கால வரலாறுகளால் பெருமிதம் கொள்கிறது. அன்பே சிவம் என்றார் திருமூலர், இதை கடைபிடித்தால் உலகின் சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கும். திருமூலரின் வழியின்தான் இன்று பயணிக்கிறது இந்தியா. களவாடப்பட்ட கலைச் சின்னங்களை மீட்டுள்ளோம். இதில் 36 தமிழகத்தைச் சேர்ந்தவை.
ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!
ராஜராஜன், ராஜேந்திரன் சக்தி வாய்ந்த கடற்படையை வளர்த்தெடுத்தார்கள். சக்திவாய்ந்த அக்கடற்படையை விஸ்தரித்தார் ராஜேந்திரன். பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது ஆபரேஷன் சிந்தூர். நாடு முழுவதும் ஆபரேஷன் சிந்தூரை கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் உதாரணம். புதிய இந்தியாவுக்கு வரைபடம் தருகிறது சோழ சாம்ராஜ்ஜியம். தழிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும். பெரும் அறிவிப்பை வெளியிட்டு முப்பெரும் விழாவில் பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
விழாவில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், தொல். திருமாவளவன் எம்.பி. , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.