இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
ராணிப்பேட்டை அருகே கிடங்கில் தீ: பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதம்
ராணிப்பேட்டை அருகே பஞ்சு கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை அருகே அம்மனந்தாங்கல் கிராமப் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சிவகோபால் (50) என்பவருக்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு உள்ளது.
இந்தக் கிடங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்படும் பஞ்சுகள் வடஇந்திய மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த பஞ்சு கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. இந்த தீ மளமளவென பரவியதில் கிடங்கு முழுவதும் தீயில் எரியத் தொடங்கியது.
இது குறித்து அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து மேலும் இரு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் போராடி சுமாா் 3 மணி நேரத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இந்தச் சம்பவத்தில் கிடங்கில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமாயின. சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் தெரிவிக்கையில் மின் கசிவு காரணமான இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனா்.