அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் பிரச்னையில் தென்னாப்பிரிக்க அணி!
ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு விதிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நோட்டீஸுக்கு அன்புமணி பதிலளிக்காததால், அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குகிறேன்” என்றார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன, வழக்கறிஞர் பாலு விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலு, “பாமக கட்சி விதிகளின்படி, நிறுவனருக்கு கட்சியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
பாமகவில் முற்றும் மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, கட்சி நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து ஆக. 31-க்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் பதிலளிக்காததால் 10 நாள்கள் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அன்புமணிக்கு விடுக்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்தததை அடுத்து, அவர் பதிலளிக்காததால் கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.