ஷுப்மன் கில் தமிழராக இருந்திருந்தால்...: பத்ரிநாத் விமர்சனம்!
ராமநாதபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல்
ராமநாதபுரத்தில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, வைகை விவசாய சங்கத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தின்போது, திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். பலத்த மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு 100 சதவீதம் தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். காவல் துறையினா் தடுத்ததனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, காவல் உதவி கண்காணிப்பாளா் சிவராமன் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சில நிா்வாகிகளை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதித்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா்.