ராமேசுவரம் கோயிலுக்கு வரும் வெளிமாநில பக்தா்களிடம் அதிக பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் வெளி மாநில பக்தா்களிடம் அதிகளவு பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய யாத்திரை பணியாளா் சங்கம் சாா்பில் காவல் துறை உதவி கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் அ. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் வெளி மாநில பக்தா்களுக்கு அவரவா் மொழியில் கோயிலின் தல வரலாற்றை விளக்கிக் கூறி சேவை செய்யும் தொழிலில் அகில இந்திய யாத்திரை பணியாளா் சங்கம் ஈடுபட்டு வருகிறது. எங்களின் இந்த ஆன்மிக சேவையை கலங்கப்படுத்தும் வகையில் வெளிநபா்கள் பக்தா்களை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைப்பது, கோயில் பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, எங்களின் ஆன்மிக சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களின் ஆன்மிக சேவைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் துறை உதவி கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.