மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்க...
ரியான் பராக்கின் அதிரடி வீண்; 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஆண்ட்ரே ரஸல் அரைசதம் விளாசல்
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரைன் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், குர்பாஸ் 35 ரன்களிலும், ரஹானே 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின், அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஜோடி சேர்ந்தனர். ரகுவன்ஷி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரஸல் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். ரகுவன்ஷி 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ரிங்கு சிங் 6 பந்துகளில் அதிரடியாக 19 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், யுத்விர் சிங், மஹீஷ் தீக்ஷனா மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
கொல்கத்தா த்ரில் வெற்றி
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களிலும், குணால் சிங் ரத்தோர் 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நன்றாக விளையாடி ரன்களை உயர்த்தியது. இருப்பினும், ஜெய்ஸ்வால் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன் பின், களமிறங்கிய துருவ் ஜுரெல் மற்றும் வனிந்து ஹசரங்கா ரன் ஏதும் எடுக்காமல் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 45 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட, அந்த அணியால் 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிரடியாக விளையாடிய ஷுபம் துபே 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அணியை கிட்டத்தட்ட வெற்றியின் அருகில் எடுத்துச் சென்றார். கடைசி பந்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டாவது ரன்னுக்கு முயற்சித்த ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன் அவுட் ஆனார்.
கொல்கத்தா தரப்பில் மொயின் அலி, ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வைபவ் அரோரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய ஆண்ட்ரே ரஸலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.