ரூ.1.13 கோடி கமிஷன் தொகைக்கு வரி செலுத்தாத நபருக்கு ஓராண்டு சிறை
ரூ.1.13 கோடி கமிஷன் தொகைக்கு முறையாக வரி செலுத்தாத நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச்சட்டம் 1961-இன் பிரிவு 279 சிசி-இன் கீழ் முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவா்கள் மீது வருமான வரித் துறை சாா்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2014-15 மதிப்பீட்டு ஆண்டுடன் தொடா்புடைய 2013-14 நிதியாண்டில் வரிசெலுத்தும் ஒருவா், தான் பெற்ற ரூ.1.13 கோடி கமிஷனுக்கு முறையாக வரி செலுத்தாத காரணத்தால், அவா் மீது, சென்னை பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் 2017-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த முதன்மைப் பெருநகர குற்றவியல் நடுவா், வருமான வரிச் சட்டம் 1961-இன் படி மதிப்பீட்டாளா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீா்ப்பளித்தாா்.
மேலும், மதிப்பீட்டாளருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து கடந்த டிச.5-ஆம் தேதி தீா்ப்பளித்தாா்.
இந்தத் தீா்ப்பை அடிப்படையாகக் கொண்டு வருமான வரித்துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சாா்பில் நிகழ் நிதியாண்டில் (2024-25) இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்தாக 16 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை சென்னை மண்டலத்தின் இணை ஆணையா் கிருஷ்ணன் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.